திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த மாதனூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் காலணி தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேல் மூடப்பட்டது.
அதையடுத்து தளர்வுகளின் அடிப்படையில் தொழிற்சாலையைத் திறக்க முடிவுசெய்த நிர்வாகத்தினர், "தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியிலிருந்தவர்களுக்கு மட்டுமே இம்மாதம் முதல் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். புதியதாகப் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு இரண்டு மாத ஊதியம் அளிக்காமலும், பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தனர்.
அதனால் ஆண், பெண் பணியாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூன் 10) தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிஐடியுவின் தொழிற்சங்கத்தினர்