திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (22). இவர் கடந்த 10-ஆம் தேதி (10.06.2022) வேலூர் மாநகர் அண்ணா சாலையில் உள்ள நகைக் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை கடை முன் நிறுத்திவிட்டு நகைக் கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடைக்குள் சென்று திரும்பிய 7 நிமிடம் இடைவெளியில் வாகனம் திருடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் கிஷோர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் கையில் பையுடன் பச்சை நிற சட்டை அணிந்து கிஷோரின் வாகனத்தை நோட்டமிட்டார். கடைக்கு வந்தவர் போல் பாவனை செய்து போலி சாவி போட்டு நொடி பொழுதில் வாகனத்தை எடுத்து சென்றார். தற்போது அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சமீப காலங்களில் வேலூர் மாநகரில் முக்கிய இடங்களிலேயே இருசக்கர வாகனம் திருடு போவது வாடிக்கையாகி வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் இரண்டாவது லாக்-அப் மரணமா?