திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சிலர் மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அனைத்து காவல் நிலைய காவல் துறையினருக்கும் போலி மருத்துவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக, காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய தனிப்படையினர் இணைந்து, மாவட்டம் முழுவதிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் கந்திலி காவல் நிலையத்தில் வேலு, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மனோ ரஞ்சிதம், குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் பழனி, நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் அருண், ஆலங்காயம் காவல் நிலையத்தில் தனபால், உமராபாத் காவல் நிலையத்தில் இம்மானுவேல் மற்றும் ஜெயபால் ஆகிய 7 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மருத்துவம் பார்க்க வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாமில் திமுக நிர்வாகிகளிடையே கைகலப்பு!