திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அபிகிரிப்பட்டறை பகுதியில் உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியதைத்தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆபத்தான முறையில் வெள்ளத்தைக் கடந்து சென்றனர்.
கடந்த இருதினங்களாக பெய்து வரும் கனமழையினால் அரங்கல் துருகம் பகுதிகளிலுள்ள காப்புகாடுகளிலுள்ள காட்டாறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அபிகிரிப்பட்டறைப்பகுதியில் உள்ள தரைப்பாலம் இன்று (ஆக.4) காட்டாறு வெள்ளத்தில் மூழ்கியது.
இதனிடையே, அரங்கல் துருகம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பள்ளிக்குச்சென்ற மாணவ-மாணவியர்கள் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் அதன் ஆபத்தை உணராமல் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் காட்டாற்று வெள்ளத்தைக் கடந்தனர்.
மேலும், அபிகிரிப்பட்டறை தரைப்பாலத்தைக் கடந்துதான் 5-க்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லும் நிலையுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, அபிகிரிப்பட்டறைப்பகுதியில் ஆம்பூர் வட்டாட்சியர் மகாலட்சுமி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு மாற்று வழி அமைக்க ஏற்பாடுகள் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: Video:மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை!