திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேதண்டபட்டியில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இயங்கிவரும் திருப்பத்தூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள் அலுவலர்களால் வளர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், சர்க்கரை ஆலை வளாகத்தில் சந்தன மரங்களும் வளர்ந்துவந்தன. இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (ஏப். 23) இரவு மரம் அறுக்கும் இயந்திரத்தைக் கொண்டு மூன்று மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அலுவலர்கள் இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதுமட்டுமின்றி கடத்திச் செல்லப்பட்ட மரத்தின் எடை, மதிப்பு எவ்வளவு என்று குற்றவாளிகளைப் பிடித்தால் மட்டுமே தெரியும் என்று அலுவலர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.
கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி ஆலை வளாகத்தில் இருந்த மூன்று சந்தன மரங்களை வெட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.