திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர், குளிதிகை பகுதியில் பாலாற்றில் அனுமதியின்றி டிப்பர் லாரி, டிராக்டர் மூலம் இரவு நேரங்களில் மணல் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் அருளானந்தம் தலைமையிலான காவல் துறையினர் நேற்றிரவு (அக்.27) அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலாற்றிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து, ஓட்டுநர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய மணல் கடத்தல் மன்னன் மயில்வாகனனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே ஆம்பூர், பள்ளிகொண்டா, வேப்பங்குப்பம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.