திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சுண்ணாம்புக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (60). இவருடைய மனைவி செல்வி (50). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சிவாஜி பெங்களூரில் கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய பிள்ளைகள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், சிவாஜியின் மனைவி செல்வியும், பக்கத்து வீட்டிலுள்ள ராணி என்பவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக செல்வி வீட்டிலேயே தூங்குவது வழக்கம்.
நேற்றிரவு அவ்வாறு அவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, வீட்டிலுள்ள பீரோவை உடைத்து அதிலுள்ள சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, காலையில் பீரோ உடைந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த செல்வி பீரோவைத் திறந்துள்ளார். அதிலிருந்த தங்க நகைகள் திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டு நடந்த வீட்டை ஆய்வுசெய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், கந்திலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக இதேபோன்று வெவ்வேறு இடங்களில் பணம், நகைகளை அடையாளம் தெரியாத கும்பல் திருடிச் சென்றிருப்பது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கள்ளச்சாவி போட்டு பைக் திருடிய மூவருக்கு போலீஸ் வலைவீச்சு - வெளியான சிசிடிவி காட்சி!