திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெரியபேட்டை, சென்னாம்பெட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் இன்று வரை (ஜூலை 11) மொத்தம் 42 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து, சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 15 நாள்களாக அப்பகுதியில் தடைகள் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமலும், அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமலும் தவித்துவருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீரென போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் சிவபிரகாசம், நகரக் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் வாழ்வாதாரம் இழுந்த குடும்பத்தினர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதாகவும், வரும் 19ஆம் தேதிக்குள் தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.