திருப்பத்தூர்: வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தோல் கழிவு நீரானது, வாணி டெக் என்ற பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு சுத்திகரிப்பிற்காக அனுப்பப்படுகிறது.
ஆனால், இவ்வாறு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும் தோல் கழிவுநீர், சுத்தகரிப்பு செய்யப்படாமலே சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சுத்தகரிக்கப்படாத தோல் கழிவுநீர், பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டியில் இருந்து வெளியேறி, அப்பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிகளுக்கு செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இதன் காரணமாக, விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் மாசு அடைவதோடு விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கழிவுநீரில் விளையும் தாவரங்களை உண்ணும் கால்நடைகளும் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உட்பட்டு வருகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தோல் கழிவுநீரினை நிலத்தில் தேக்கி வைக்கும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில், வாணியம்பாடியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு தோல் தொழிற்சாலைகளில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், பல நாட்களாக இந்த பொது தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தோல் கழிவுகளை, அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெயக்குமார் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “வாணியம்பாடியைச் சுற்றி அதிக அளவு தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன.
இந்த தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தோல் கழிவுநீரானது, சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுவதில்லை. மேலும், மழைக்காலங்களில் தோல் கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே பாலாற்றில் திறந்து விடுகின்றனர். இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது.
மேலும், குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்காமல், உப்பு தண்ணீர் தான் கிடைக்கின்றது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து சுத்திகரிப்பு நிலையத்தில் கேட்டால், சரியான முறையில் விளக்கம் அளிக்க மறுக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் எண்ணெய் கசிவு எப்படி?: பசுமை தீர்ப்பாயம் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு