திருப்பத்தூர்: 1980ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி ஜோலார்பேட்டையில் நக்சலைட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வீரமரண்மடைந்த காவளர்களை நினைவுகூறும் வகையில் 43 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் அனுசரிப்பு விழா இன்று (06.08.2023)நடைபெற்றது.
கடந்த 1979 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்த கேசவன் ரெட்டியார் மற்றும் அவரது மனைவியை கொன்று பணம் நகைகளை நக்சல்லைட்டுகள் கொள்ளையடித்தனர். அப்போதைய சட்டமன்ற உறுபினராக இருந்த அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது நக்சலைட் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த நக்சலைட் அமைப்பை சேர்ந்த சிவலிங்கம் என்பவரை பிடிக்க அப்போதைய ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 1980 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமத்தில் சிவலிங்கம் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிவலிங்கத்தை பிடித்தனர்.
பின்னர் காவல் துறையினர் ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ஜீப்பில் இருந்த ஆய்வாளர் பழனிசாமி, தலைமை காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ் மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஜார்கண்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 30 பேர் பலியா?
இதனையடுத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் உயிரிழந்த காவளர்களுக்காக மணிமண்டபம் கட்டப்பட்டு ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நக்சலைட்களால் வீரமரணம் அடைந்த நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு 43 ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் அனுசரிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னால் ஓய்வு பெற்ற காவல் தலைவர் வால்டர் தேவாரம், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர் ஜான், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர், மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து 12 துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் வான் நோக்கி மூன்று முறை சுட்டு 36 குண்டு முழங்க அஞ்சலி செலுத்தினர்.