திருப்பத்தூரை அடுத்த வக்கீல் ஐயர் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 48). கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், சங்கருக்கு அவருடைய சொந்த நிலத்தில் மற்றொரு வீடும் உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு (அக்.23) 10 மணியளவில் சங்கர் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு தனது நிலத்திலுள்ள வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், சங்கரின் வீட்டினுள் நுழைந்து, நகைகள், வெள்ளி, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, இன்று (அக்.24) காலையில் வக்கீல் ஐயர் தோப்பிலுள்ள தனது வீட்டிற்கு வந்த சங்கர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று அவர் பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் நகைகள், 500 கிராம் வெள்ளி, 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.
திருட வந்த கும்பல் திருட்டுக்கு பயன்படுத்திய கடப்பாறையை அங்கேயே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி காவல் துறையினர், வீட்டில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் விட்டுச்சென்ற கடப்பாறையை கைப்பற்றிய காவல் துறையினர், திருட்டு கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.