திருப்பத்தூர் நகர் பகுதியில் கௌசிக் என்பவருக்கு பூபாளம் ஜுவல்லரி என்ற பிரபல நகை கடை உள்ளது. இந்தக் கடையில் ஜோன்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 23) மற்றும் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 35) விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தனர்.
கடந்த நவம்பர் 22ஆம் தேதி நகை கடையில் விற்பனையானதில் 60 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனியார் வங்கியில் செலுத்தச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்துச் சென்று, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள பூஞ்சோலை மெடிக்கல் அருகே அஜித் குமார் மற்றும் பரத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை பறிக்க முயற்சித்துள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட இருவரும் பணத்தை இருக்க பிடித்துக் கொண்டனர். பின்னர், அப்பகுதியில் மற்ற வாகனம் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மிளகாய் பொடி தூவியதனால் பாதிக்கப்பட்ட அஜித்குமார் மற்றும் பரத் ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறை மற்றும் தனிப்படை காவல்துறை புகாரின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 28) என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பிரபாகரன் மற்றும் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்துவந்த நிலையில், சுரேஷ்குமார் தனியார் வங்கியில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவாக மூன்று வருடமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தினந்தோறும் அதிக தொகையினை வங்கியில் செலுத்தும் நபர்களை தேர்ந்தெடுத்து பிரபாகரனிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி பூபாளம் ஜுவல்லரியிலிருந்து ஊழியர்கள் அதிக தொகையினை செலுத்தி வருவதாக சுரேஷ்குமார் கூறியதால், நகை கடை ஊழியர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளனர். இதில், செலந்தம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 25), வேலநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், பெங்களூருவைச் சேர்ந்த ரவிசங்கர் (வயது 37) ஆகியோர் ஒன்றிணைந்து பணத்தை கொள்ளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கடந்ஹ 22ஆம் தேதி பூபாலன் ஜுவல்லரி கடையில் 60 லட்சம் பணத்தைக் கொண்டு செல்லும்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதி மிளகாய் பொடியை துவி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் தனிப்படை காவல்துறை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் பெங்களூருவில் பதுங்கி இருந்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த பெங்களூர் பகுதியைச் சேர்ந்த நித்திஸ், சென்னையைச் சேர்ந்த வெங்கட் மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேரை இன்று (நவ. 24) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்ட மொத்தம் 8 பேரை இதுவரையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி பணத்தைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நோயை தீர்க்க வேண்டிய இடத்திலேயே நோய் உற்பத்தியா?.. சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி..