வேலூர் சாய்நாதபுரம் தனியார் கல்லூரி அருகே வழிப் பாதை ஒன்று உள்ளது. இவ்வழியை சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுடுகாட்டுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பாதையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தனியார் கல்லூரி அருகே உள்ள பிரச்சினைக்குரிய இடத்தில் அரிச்சந்திரன் சாமி சிலை ஒன்றை பொதுமக்கள் வைத்தனர்.
இந்தப் பாதை சுடுகாட்டுக்குச் செல்லும் வழி என்பதால் அந்த இடத்தில் அரிச்சந்திரன் சிலை வைத்துவழிபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 31) காலை உதவி ஆட்சியர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்குச்சென்று பார்வையிட்டனர்.
அப்போது பொதுமக்கள் வைத்திருந்த அரிச்சந்திரன் சாமி சிலையை அப்புறப்படுத்த சென்றனர். சிலை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பிரமுகர் பி.எஸ்.பழனி உள்பட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை பாகாயம் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதன் பின்னர் வருவாய்துறை அலுவலர்கள் அரிச்சந்திரன் சிலையை அங்கிருந்து அகற்றினர்.
பொதுமக்கள் பயன்படுத்தகூடிய சுடுகாட்டுபாதை அந்த பகுதியில் உள்ளது. ஆனால் அவர்கள் சாமி சிலை வைத்திருந்த இடம் பட்டா நிலம். எனவே சாமி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - முதலமைச்சர் சந்திப்பு.. ஸ்டாலின் வழங்கிய அன்பு பரிசு..