திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலை அடிவார பகுதியைச்சேர்ந்தவர் சரிதா முத்துக்குமார். இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத்தேர்தலில் திமுகவின் சார்பில் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக மாவட்ட கவுன்சிலரின் கணவர் முத்துக்குமார் உமராபாத் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகாரளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜன.1) இரவு 11 மணியளவில் முத்துக்குமார் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டிற்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கதவுகளைத் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டிலிருந்து வெளியே வரும்படி கூச்சலிட்டுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்து வெளியே வராவிட்டால், கதவை உடைத்து உள்ளே புகுந்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
தப்பியோடிய கும்பல்
இதனால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் உடனடியாக அருகில் உள்ள உமராபாத் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் வருவதைப் பார்த்தவுடன் அந்த கும்பல் வீட்டு வாசலிலிருந்து தப்பியோடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட கவுன்சிலர் சரிதா முத்துக்குமார் உமராபாத் காவல் நிலையத்தில் தனது ஆதரவாகளுடன் வந்து புகார் அளித்தார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட கவுன்சிலர் சரிதா முத்துக்குமார், 'ஏற்கெனவே எனது கணவருக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் எனது கணவரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.
தற்போது நள்ளிரவில் வீடு புகுந்து சிலர் கொலை மிரட்டல் விடுப்பதால், எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. உடனடியாக காவல் துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் 3,325 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்