திருப்பத்தூர் மாவட்டம் கடந்தாண்டு வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சிவனருள் நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் வாரந்தோறும் நடைபெற்றுவந்த மக்கள் குறைத்தீர் கூட்டம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறவில்லை.
தற்போது, நோய் குறைய தொடங்கியுள்ள நிலையில், மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதல் படி இன்று (அக்.19) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது.
இந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல், உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நபரிடமிருந்து போதிய பாதுகாப்புடன் மனுக்கள் பெறப்பட்டன.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரன், மாவட்ட திட்ட இயக்குநர் மகேஷ்பாபு உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.