திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று (ஜூன் 1) கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களை செவிலியர்கள் உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி மருத்துவர்களிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் என்ன அராஜகம் நடக்கிறது, உடனடியாக மாவட்ட ஆட்சியரை சம்பவ இடத்திற்கு வரச் சொல்லுங்கள்’ என கூச்சலிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள், காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்க, திருப்பத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம்
ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை
அதன் பின்னர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைக்கு வந்து, நோயாளிகளின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ‘கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். அதிக நபர்கள் அவரை சூழ்ந்து இருந்தால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கும்’ எனப் பேசி சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, நோயளிகளின் உறவினர்கள், தாங்கள் செய்தது தவறை ஒப்புக்கொண்டனர்.
காவலர்களை கண்டித்த ஆட்சியர்
அதன்பின் காவலர்களிடம் ‘ அரசு மருத்துவமனைக்கு அதிக வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத் தான் நீங்கள் இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அதிக வாகனங்கள் செல்ல அனுமதித்தது யார்?’ என சரமாரி கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து ‘இனிமே இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’ என காவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் நோயாளிகளின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.