திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி நகர் , புதுமனை பகுதியில் கடந்த ஐந்து மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் ஆத்திரமடைந்து ஆம்பூர் - பேர்ணாம்பேட் புறவழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
அப்பொழுது பேர்ணாம்பேட் பகுதியில் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்காக அவ்வழியாக சென்ற பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி வாகனத்தை முற்றுகையிட்டு, குடிநீர் சரிவர வழங்கப்படவில்லையென அமைச்சரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து, இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விரைந்து பேசி, இன்று மாலைக்குள் பிரச்னை சரி செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இதே நிலை நீடித்தால், ரேஷன் கடைகளில் வெங்காயம் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்