திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் பல ஆண்டுகளாக வண்ணான்துறை பகுதி முதல் பாலாறு வரை செல்லும் கானாறு உள்ளது. இந்த கானாற்றின் அருகே அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் மழைக் காலங்களில் கானாற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீரானது குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கானாறு ஆக்கிரமிப்புகளால் மயானத்திற்குகூட செல்ல வழியில்லாமல் தவிப்பதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை ஆம்பூர் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், அதிகாரிகள் அவ்வப்போது கானாறு ஆக்கிரமிப்புகளை அளவு மட்டுமே எடுத்துச் செல்வதாகவும், அதனை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே சான்றோர்குப்பம் பகுதி மக்கள் சார்பில், கானாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, இன்று (டிச.31) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
அதன்படி, பொதுமக்கள் அனைவரும் சான்றோர்குப்பம் மந்தகரை பகுதியில் திரண்டபோது அங்கு வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென்று கூறி தடுத்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள கடைகளை அடைத்து, தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ரசிகர் மன்றங்கள் மக்கள் நல மன்றங்களாக மாற வேண்டும் - டி.ராஜேந்தர் வேண்டுகோள்