திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட வன்னியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர், பாண்டுரங்கன். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, மாற்று சமூகத்தைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வன்னியநாதபுரம் பகுதிக்கு வந்து உள்ளார்.
பின்னர், கிராம மக்கள் பாண்டுரங்கன் குடும்பத்தினரை ஊரில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதிக்காமலும், அவரது குழந்தைகளை மற்றவர்கள் வீட்டில் சேர்க்காமலும் சாதி பெயர் சொல்லி திட்டி வந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாண்டுரங்கன் வீட்டின் கதவை உடைத்து தொந்தரவு அளித்து வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாண்டுரங்கனின் சகோதரி நாகம்மா என்பவர் நேற்று (அக்.11) மதியம் உயிரிழந்த நிலையில், நேற்று முதல் இன்று காலை வரை நாகம்மாவின் இறப்பிற்கு வன்னியநாதபுரம் கிராம மக்கள் யாரும் வரவில்லை எனவும், இறப்பு நிகழச்சியில் மேளம் அடிக்கக் கூட யாரும் போகக் கூடாது என கிராம பஞ்சாயத்தில் கூறியதாக பாண்டுரங்கன் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
உடனடியாக, புகாரின் அடிப்படையில் உமராபாத் காவல் துறையினர் மற்றும் தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாண்டுரங்கனின் வீட்டிற்குச் சென்று துக்க நிகழ்ச்சிக்கு மேளம் அடிக்க ஏற்பாடுகள் செய்தனர். பின்னர், அதே கிராமத்தில் நாகம்மாவின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!