ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அல்லி என்பவரின் மகன் மோகன்(37) என்பவரும் நாட்றம்பள்ளி வட்டம், அம்மணாங்கோயில் ஊராட்சி முத்தானூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரன்(24), இவருடன் இன்னொரு நபர் ஆகிய மூன்று பேரும் மோட்டார் இருசக்கர வாகனத்தில் கடந்த 12ஆம் தேதி, ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு, கீழ் முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் முயல் வேட்டைக்குச் சென்றனர்.
அப்போது மோகன் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியின் குண்டு வெடித்து, கருணாகரன் என்பவருக்குக் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதை மறைத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து சென்று 14ஆம் தேதி ஓசூர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த அறுவை சிகிச்சையின்போது, காலில் இருந்து இரும்பு குண்டு அகற்றப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் பழனிமுத்து தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் முயல் வேட்டையில், மூவரும் ஈடுபட்டது அறிய வந்தது.
இந்நிலையில் ஜோலார்பேட்டை அருகே நேற்று முன்தினம் (ஜூலை 14) இரவு மோகன்(37) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து முயல் வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.