திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தகரகுப்பம் காப்புகாடு பகுதியிலிருந்து ஆலங்காயம், காப்புக்காடு, வசந்தபுரம் வனப்பகுதிக்குள் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காட்டுயானை ஒன்று புகுந்தது.
அந்த யானை இன்று, காளியம்மன் கோயில் வட்டம், அருணாச்சலம் கொட்டாய், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்தது.
கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஆபத்தை உணராமல் யானை முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.
எனினும், அந்த ஒற்றைக் காட்டு யானை யாரையும் ஒன்றும் செய்யாமல் தண்ணீர் குடித்துவிட்டு அமைதியாக திரும்பிச் சென்றது.
பின்னர், அங்கிருந்த ஒரு மாந்தோப்புக்குள் நுழைந்து பதுங்கிக் கொண்டது. தற்போது, அலங்காயம் வனச்சரகர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றைக் காட்டுயானையை வனத்துக்குள் விரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: வைரலாகும் காளையின் பாசப் போராட்டம்!