திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆயற்பாடியைச் சேர்ந்தவர் செல்வம் (50). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை அமைத்து தொழில் செய்துவருகிறார். இதற்கிடையில் பணி நிமித்தமாக வாணியம்பாடி நியூட்டன் பகுதிக்குச் சென்று, அங்கு பணிகளை முடித்துக்கொண்டு பின்னர் வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனம் மூலம் சென்றார்.
அப்போது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள புறவழிச் சாலையில், சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அவர் முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். இதில் நிலைதடுமாரி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகிலிருந்தவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தாக்க முயன்றனர். இருப்பினும் அவர்களிடமிருந்து தப்பிச் சென்று ஓட்டுநரை தலைமறைவானார்.
பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.