கரோனா தொற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க திருப்பத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக செயல்பட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள், மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வீரமணி, “திருப்பத்தூரில் 45 பேர் தனிமைப் படுத்தப்பட்டு தற்காலிகமாக உருவாகப்பட்டுள்ள மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருடைய ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை இவர்களுக்கு கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. பரிசோதனை முடிவு அப்படியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். திருப்பத்தூரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பத்து பேரை வேலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.