வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தைப் பிரித்தப் பின்னர் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 26 கிராமங்களையும், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து இரண்டு கிராமங்களையும் மாதனூர் ஊராட்சியில் இணைக்க அரசாணை வெளியிட்டத்தை கண்டித்தும், மக்களிடம் கருத்து கேட்காமலேயே ஊராட்சிகளை இணைத்ததையும் கண்டித்து மேல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இன்று ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், பல ஆண்டுகளாக ஆலங்காயம் ஒன்றியத்திலிருந்த கிராமத்தை மக்களிடம் கருத்து கேட்காமலேயே மாதனூர் ஊராட்சியில் இணைத்துள்ளனர் என்றனர். மேலும் மலை கிராமமான மேல் குப்பம் கிராம மக்கள் மாதனூர் செல்ல இரண்டு பேருந்துகள் மாறி 45 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய நிலையும், மக்கள் வீண் அலைச்சலுமே மிஞ்சும் என்றும் குறிப்பிட்டனர்.
ஆதலால் அரசு அலுவலர்கள் இந்த விவகாரத்தில் மறு பரிசீலனை செய்து மறுபடியும் மேல் குப்பம் ஊராட்சியை ஆலங்காயம் ஊராட்சியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லையெனால் மறியல் போராட்டத்திலும், வரும் தேர்தல்களையும் புறக்கணிப்போம் என குறிப்பிட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன், வாணியம்பாடி துணை வட்டாச்சியர் கௌரி சங்கர், இதுகுறித்து மனு அளிக்கும்மாறும் இதை ஆட்சியர் பார்வைக்கு எடுத்துச்சென்று உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்துச்சென்றனர்.
இதையும் படிங்க: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்!