தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இறைச்சிக் கடைகளில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடுவதால், ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் சிவனருள் இறைச்சிக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட்டு, பாக்கெட் செய்து பொதுமக்களுக்கு வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், வாணியம்பாடி பஷிராபாத், கபுராபாத், முகமது அலி பஜார் ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊரடங்கு உத்தரவையும் மீறி இறைச்சி கடைகளில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் வியாபாரிகள் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையிலான நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நகராட்சி வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி வீதியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, அங்கு சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இறைச்சிகளை விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளை மூடி, இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு ஊரடங்கு உத்தரவு குறித்தும், இறைச்சி விற்பனையாளர்கள், இறைச்சியை பாக்கெட் செய்து அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் எனவும் நகராட்சி அலுவலர்கள் கூறினர்.
இதையும் படிங்க: இறைச்சி, மீன் விற்பனை கூடங்களை மூட அமைச்சர் உத்தரவு