திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு தனியார் மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதால் தான் தற்போது திமுகவினருடன் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மிக மோசமான நிகழ்வில் அதிமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருக்கக் கூடிய அருள் ஆனந்தத்தை சிபிஐ கைது செய்திருக்கின்றது. இதில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மேற்பார்வையில் உரிய சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். திமுக இன்றைக்கு வலுவாகவே உள்ளது. கருணாநிதிக்கு பிறகு உண்மையான அரசியல் வாரிசு, மு.க.ஸ்டாலின் தான். அழகிரி போல எத்தனை பேர் வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். தொகுதி பங்கீட்டு குறித்து தலைமை தான் முடிவெடுக்கும். திமுக கூட்டணியில் யார் யார் சேர்க்க வேண்டும் என்பது திமுக தலைவர் எடுக்க வேண்டிய முடிவு. அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாளை தமிழ்நாடு வருகை!