திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த அருள்புரம், பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டையில் ஆண் ஒருவர் கட்டிவைக்கப்பட்டிருப்பதாக, கடந்த 14ம் தேதி அவசர எண் 100க்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற பல்லடம் காவல்துறையினர், கட்டி வைக்கப்பட்டிருந்த நபரையும், அவர் அருகே நின்றிருந்த பெண்கள் இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மீட்கப்பட்ட நபர், அவிநாசி சூளை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்தது. அவரும், இரு பெண்களும், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஜே.ஜே. மில்ஸ் என்ற பனியன் நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அந்நிறுவனத்தில், சிவக்குமார் மேலாளராகவும், பெண்கள் இருவரும் ஊழியர்களாகவும் பணிபுரிந்து வந்ததுள்ளனர்.
இந்த நிலையில், சிவக்குமார், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்ததாகவும், திடீரென வேலையை விட்டு இருவரையும் நீக்கியதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், சிவகுமாரை பல்லடத்திற்கு வரவழைத்து, அவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கட்டி போட்டு, மிளகாய் பொடி தூவி தாக்கினர். பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு அழைத்து, இச்சம்பவம் தொடர்பாக தகவல் கொடுத்ததாக, விசாரணையில் ஒப்புக் கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பெயரில், இந்திய தண்டனை சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீதும், சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், பெண்கள் இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிந்து, மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்பொழுது மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில், தன் சொந்த ஊரான மதுரைக்குச் சென்ற பெண்கள், அங்கு நேற்று(செப்.28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதில், புகார் கொடுத்த தங்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகவும், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி, தங்களை தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே பணியிலிருந்து விலகி, சொந்த ஊரான மதுரைக்குச் சென்று விட்ட நிலையில், தன் புகைப்படத்தை மார்பிங் செய்து சிவகுமார் தன்னை மிரட்டினார்.
செப்டம்பர் 14 ஆம் தேதி தனது பிறந்த தினம் என்பதை அறிந்து, அன்று அவரைப் பார்க்க வேண்டும் எனக் கூறியதால், தனது புகைப்படத்தைப் பெற மதுரையில் இருந்து பல்லடத்திற்குச் சென்றதாகவும், அப்பொழுது தற்காப்பிற்காக மிளகாய் பொடியை தூவி கைகளைக் கட்டி, அவசர உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தேன். ஆனால் தன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விட்டதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், பல்லடம் டி.எஸ்.பி ஸ்ரீ ராமச்சந்திரன், சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் கூறுகையில், இரண்டு பெண்களும் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சிவக்குமாரை தாக்கியதால் அவர்கள் மீதும், பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பாகுபாடின்றி விசாரணை மேற்கொண்டு இரு தரப்பினரும் கைது செய்யப்பட்டனர்.
பெண்கள் தொடர்பான வழக்கு என்பதால் மட்டுமே மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி உடனிருந்தார். அவர் வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில், அவர் மீது கூறப்பட்ட புகாருக்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில், பெண்கள் சிவக்குமாரை கட்டிவைத்து தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க : அண்ணா நகரில் வீடு வீடாக சென்று ரெய்டு நடத்தும் போலி போலீஸார் - சிக்கிய வீடியோ!