திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூடவுன் நான்காவது தெருவில் தேசத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் நேற்று முன்தினம் டிசம்பர் 28 ஆம் தேதி, இரவு பூஜை முடிந்ததும் பூசாரி நடை அடைத்து சென்றுள்ளார்.
மறுநாள் கோயிலைத் திறந்தபோது நுழைவாயில் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த 5 கலசங்கள் மற்றும் கோயில் பக்கத்திலுள்ள கோயில் நிர்வாகி மனோகரன் என்பவர் வீட்டுப் பூஜை அறையிலிருந்த ஒரு சவரன் தங்க மோதிரம், நடராஜ சிலை, காமாட்சி விளக்கு, பூஜை மணி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
காவல்துறை நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகி மனோகரன், நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் உத்தரவின் பேரில் நகர உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான குற்றப்பிரிவு காவல்துறையினர் மர்ம நபரை 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.
அவரை விசாரித்ததில் பிடிபட்ட நபர் வாணியம்பாடி நியூடவுன், மில்லத் நகரைச் சேர்ந்த நஜீம் (23) என்பது தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து 5 தங்கக் கலசங்கள், ஒரு சவரன் தங்க மோதிரம் மற்றும் பூஜை மணி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி 'தெருக் கூத்து' கலைஞன் புகைப்படத்தொகுப்பு!