திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்புப் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இம்முகாம் அருகில் அதே பகுதியைச் சேர்ந்த அப்போடன் என்பவருக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் சாமல்பட்டி ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் பனை, ஈச்சம் மரங்களிலிருந்து பதநீர் இறக்கி அதன்மூலம் கருப்பட்டி காய்ச்ச ஆவணம் அனுமதி பெற்றுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் போலி ஆவணம் வைத்து மறைமுகமாக அனுமதியின்றி கள் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் கள் விற்பனையால் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான மதுப்பிரியர்கள் கள்ளை குடித்துவிட்டு போதையில் முகாம் பகுதியில் அராஜகம் செய்துவருவதாகவும் அங்குள்ள பெண்கள் வெளியில் எந்தவித பணிக்கும் செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் அனுமதியின்றி கள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சேகரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க... தஞ்சையில் கள் இறக்கிய மூவர் கைது