திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆலங்காயம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல் துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்று அங்குள்ள விவசாய நிலங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சிவகுமார் என்பவருக்குச் சொந்தமான 20 சென்ட் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மல்லிகைப்பூவுடன் சேர்த்து, கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மல்லிகைப்பூ தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 கிலோ கஞ்சா செடிகளை, காவல் துறையினர் பறித்து, அங்கேயே தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர். பின்னர் விவசாயி சிவகுமாரை ஆலங்காயம் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா விற்ற 17வயது சிறுவன் கைது!