திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த தோட்டாளம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு பகுதியில் இருந்து ஆம்பூரை நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி, தோட்டாளம் மேம்பாலத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்ட கிளீனர் சிவகுமார் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஓட்டுநர் பாலாஜி மற்றும் சீனிவாசன் ஆகியோரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து லாரிக்கு அடியில் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கிய நிலையில், உயிரிழந்த லாரி கிளீனர் சிவகுமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இமாச்சலப் பிரதேச வெள்ளத்தில் சிக்கித் தவித்த 12 தமிழ் மாணவர்கள் பத்திரமாக மீட்பு!