திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவுக்கு உட்பட்ட நாயுணசெரு கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி திருப்பதி மகள் ஜனனி(6), சண்முகம் மகள் ரேக்கா (9) ஆகிய இரண்டு சிறுமிகளும் இயற்கை உபாதை கழிப்பதற்கு அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் அந்த சிறுமிகளின் உடலை எடுக்க விடாமல் தடுத்து நிறுத்தி எங்களுடைய குழந்தைகள் இறப்பதற்கு காரணம் ஏரியை சரியாக தூர்வாரப்படாமல் விட்டதுதான். ஒருபக்கம் குழியாகவும் மறுபக்கம் மேடாகவும் தூர்வாரிய அரசு அலுவலர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
அதேசமயம் எங்கள் பகுதிக்கு கழிவறைகள் இல்லாததால் நாங்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்கு ஏரிக்கு செல்வது வழக்கம். ஆனால் எங்கள் பகுதிக்கு கழிப்பிட வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.