திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரயில்வே தண்டவாளத்தில் உள்ள உயர் மின் அழுத்தக் கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 4 பேர், மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்களுள் ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில், உயர்மின் அழுத்த மின்சாரக் கம்பிகளை மாற்றும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் எடுத்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பிகள் மாற்றும் பணியில் மொத்தம் 16 ஊழியர்கள் ஈடுபட்டு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக உயர் மின் அழுத்தக் கம்பியில் இருந்து தொழிலாளர்கள் மீது திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஶ்ரீராம் லகுரி (31), நந்தலால் லகுரி (31), சூஜூ கோபே (33) மற்றும் துரந்த் (20) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களை மீட்ட சக ஊழியர்கள், அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த துரந்த்-க்கு 75 சதவீதம் காயம் ஏற்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். பின் மேல் சிகிச்சைக்காக துரந்த், கடந்த ஜனவரி 1ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இருந்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த துரந்த், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பணியில் இருந்த தொழிலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.