திருப்பத்தூர்: ஆம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான அபூபக்கர் கலந்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு குறைவான நாள்களே உள்ளதால் தற்போது உள்ள திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியை விரைவாக செய்ய வேண்டும். திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் களத்தில் இறங்கி பணியாற்றி, திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
அனைத்து ஜமாத்களிலும் சென்று ஆதரவு பெற்று திமுக கூட்டணியை வெற்றி பெற செய்து திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் அரியணையில் ஏற்றுவதே தற்போதைய குறிக்கோள். சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளை வேரோடு நிராகரிக்க சிறுபான்மை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அபூபக்கர் பேசுகையில், ஆம்பூரில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைத்ததாகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கு ஒதுக்க வேண்டும் என திமுக தலைமைக்கு வலியுறுத்தி உள்ளதாகவும், திமுகவினருடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை, நல்ல உறவு நீடிப்பதாக தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வெற்றி பெறச்செய்து மு க ஸ்டாலினை அரியணை ஏற்றுவதே ஒரே குறிக்கோள் என்றும் தேர்தல் பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் திமுக கூட்டணி கட்சி போட்டியிட கூடிய அனைத்து இடங்களிலும் களப்பணி ஆற்றி வெற்றி பெற செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'மத்திய அமைச்சர் பதவியை விரும்பவில்லை'- மு.க. அழகிரி