திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட்ட வெலக்கல்நத்தம் சென்னானூர் பகுதியைச் சேர்ந்தவர் தேசிங்கு ராஜா. இவரது மகன் சுப்பிரமணி (25). இவர் அதே பகுதியில் கிருஷ்ணன் என்பவரிடம் 2016ஆம் ஆண்டு அடுத்தடுத்து 8 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில், வெளியூரில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்த சுப்பிரமணி, மூன்று வருடம் கழித்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது, சுதா என்பவர் பெயரில் தான் வாங்கிய நிலம் கிரையம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. உடனே, நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகம் சென்ற சுப்பிரமணி, சார்பதிவாளர் கலைவாணியிடம் தன்னுடைய நிலம் வேறு ஒருவருக்கு போலியான ஆவணம் மூலம் கிரையம் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு சார்பதிவாளர் கலைவாணி அவரை ஒருமையில் பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சுப்பிரமணி, அவரது உறவினர்களுடன் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கிறோம் என்று காவலர்கள் கூறியதால், போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.
நாட்றம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதில் சார்பதிவாளர் கலைவாணி கைதேர்ந்தவர் என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வாரினால் கையோடு வரும் தார் சாலை : ஊழல் முறைகேடுகளை விசாரிக்க கோரும் மக்கள்!