கரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடைகள், சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
"கரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வரும் ஏழாம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிக அளவில் பரவும் என இந்து முன்னணி கருதுகின்றது.
கடந்த 40 நாள்களாக மக்கள் டாஸ்மாக் இல்லாமல் வாழ பழகியுள்ளனர். இதே நிலை நீடித்தால் சிறப்பாக இருக்கும். டாஸ்மாக் கடை திறப்பதால் பல குற்ற சம்பவங்கள் நிகழும், பல குடும்பங்களின் வாழ்வு சீரழிந்து விடும். எனவே பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு அறிவிக்கும்பட்சத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுடைய அனைத்து வாக்குகளும் அதிமுக அரசுக்கு கிடைக்கும். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள்தான் சாராய ஆலைகளை நடத்தி வருகின்றனர். எனவே இதில் கட்சி பேதம் பார்க்காமல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். தற்போது திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படும்.
எனவே மாநில அரசு வடமாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம்- சீமான்