திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த குஷ்டம் பள்ளி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள துணிக்கடைக்கு கடந்த மாதம் வேலைக்குச் சென்றார். அங்கு, அவருக்கு போதிய உணவு அளிக்காமல் தொடர்ந்து வேலை வாங்கி கொடுமை படுத்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தன்னை வீட்டுக்கு அனுப்புமாறு பலமுறை கேட்டும் அவரை அனுப்பாததால் அங்கிருந்து தப்பித்து நேற்று முன்தினம் (ஜனவரி 1) வீடு திரும்பினார். வேலை செய்த இடத்தில் தனக்கு உணவு வழங்காமல் கொடுமை படுத்தியதாக தன்னுடைய மனைவி, உறவினர்களிடம் கூறிய நிலையில், நேற்று (ஜனவரி 2) அவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
வேலைக்குச் சென்ற இடத்தில் அவரை தாக்கி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறி அவருடைய மனைவி, உறவினர்கள் வேலைக்கு அழைத்துச் சென்ற புருஷோத்தமன் என்பவரது வீட்டு முன்பாக வெங்கடேசனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அவரது மனைவி திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பணம் வைத்து சீட்டு விளையாடிய 19 பேர் கைது: போலீசார் விசாரணை