திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர் பெரியதாய் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (30). இவர், சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு தரணி (20) என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில், அடிக்கடி முருகேசனும், அவரது அண்ணன் கோவிந்தராஜனும் தரணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று மாலை மீண்டும் இருவரும் தரணியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, அவரது தாய் வீட்டிற்குச் சென்று பணம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து தரணியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தரணியின் வீட்டிற்கு வந்த தாய், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தரணியின் தாய் சித்ரா உடனடியாக, திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்குச் சென்று வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, தனது மகளை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டதாகப் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகேசனையும், அவரது அண்ணன் கோவிந்தராஜையும் தேடிவருகின்றனர்.
திருமணமான நான்கு ஆண்டுகளில், இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு தாய் வரதட்சணை கொடுமையில் இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து உரையாடிய எஸ்பி