திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஈஸ்வரன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தக்காளி வியாபாரம் செய்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் (பிப். 21) இரவு ஆந்திர மாநிலம், குப்பம் பகுதிக்கு தக்காளி ஏற்றிவருவதற்காகச் சென்றுவிட்டார்.
ரவியின் மனைவி மகேஸ்வரி (32), அவருடைய மகள் நதியா (15) இருவரும், குப்பத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர். பின் இவர்கள் இருவரும் சுமார் 10 மணி அளவில் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் சாளரம் (ஜன்னல்) வழியாக வந்த கொள்ளையர்கள், மகேஸ்வரி, நதியா மீது மயக்க மருந்து தெளித்துள்ளனர்.
பின் அவர்கள் மாடிப்படியின் வழியாக இறங்கி, முன் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் நகை, 75 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் யாரென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஏடிஎம்மில் நூதனத் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது!