திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் விண்ணமங்கலம் கிராமத்தில் குறிப்பிட்ட சில குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் வீட்டிற்குள் நுழைந்ததால் இரவு முழுவதும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இது குறித்து இன்று (ஜூன் 26) காலை அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளம் மூலம் மழை நீரை அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மழைநீர் புகுந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் மழைநீர் செல்வதற்கான கால்வாய்கள் அடைக்கப்பட்டிருந்தாலும், கால்வாய் செல்லும் வழிகளில் பலர் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, மழை நீர் ஏரிப்பகுதிகளுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.