திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கந்திலி பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (70). இவருக்கு ஸ்ரீதர், கிருஷ்ணகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இணைந்து தங்களது வீட்டின் கட்டடத்திலேயே மளிகைக் கடை நடத்திவருகிறார். இந்நிலையில், நேற்று இரவு(ஜூலை.31) அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டிற்குச் சென்று, மளிகைப் பொருள்கள் வேண்டும் எனக்கூறி கடைக்குள் நுழைந்தனர்.
பின்னர், கடையில் இருந்த சீனிவாசன், கிருஷ்ணகுமார் ஸ்ரீதர் ஆகியோரைக் கத்தியை கொண்டு மிரட்டி தாக்கி 25 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் மளிகைப் பொருள்களை எடுத்துச் சென்றனர். இதில் ஸ்ரீதருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
இதையடுத்து, தப்பிச் சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த சசிதரன் (23) என்பவரை அவர்கள் கத்தியைக் கொண்டு மார்பில் பயங்கரமாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயங்களுடன் கிடந்த சசிதரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
படுகாயங்களுடன் இருந்த கடையின் உரிமையாளர் ஸ்ரீதர், பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இது குறித்த புகாரின் பேரில் கந்திலி அடுத்த புங்கனூர் பகுதியில் சந்தேகப்படும் படியாக வசித்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி குமார் (32) என்ற நபரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகத் தெரியவருகிறது. மேலும், இவருடன் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.