திருப்பத்தூர்: ஓடும் பேருந்தில் நடத்துநருக்கு மயக்கம் ஏற்பட்டத்தால், 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி அருகேயுள்ள அரூர் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன்(50). அரசு பேருந்து நடத்துநராக உள்ளார். இவர், வேலூரிலிருந்து சேலம் சென்ற பேருந்தில் பயணிகளிடம் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்.
சில்லரை கொடுக்கும் வேளையில், ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்துள்ளது. அதனை எடுக்க கீழே குனிந்தவர் எழவே இல்லை. பயணிகள் ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்த போதும் அந்த ரூபாய் நோட்டை வாங்காமல் நடத்துனர் கீழே மயங்கி சுருண்டு விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள், உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநர் அறிவுறுத்தியுள்ளனர்.
கீழே விழுந்த நடத்துநர், எழாமல் இருந்ததால், இதனால் ஓட்டுநர் குணசேகரன் உடனடியாக அருகிலிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பயணிகளோடு பேருந்தை ஓட்டிச்சென்று, நடத்துநரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு நடத்துனரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக நடத்துனரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றும் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு, நடத்துநர் கருணாகரனை மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நடுவழியில் பரிதவித்த பயணிகள், நடத்துநர் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஓட்டுநர் குணசேகரன் அனைத்து பயணிகளையும் மாற்று பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேருந்து சேலம் மெய்யனூர் பணிமனைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.