வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க உள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி விடப்பட்டுள்ளது.
ஆனால் 12ஆம் வகுப்பு சி பிரிவை சேர்ந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு செல்லாமல் வகுப்பறையிலேயே அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர்கள் வந்து வீட்டுக்கு செல்லும் படி அறிவுறுத்தியும் அதை சற்றும் பொருட்படுத்தாத மாணவர்கள் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்தெரிந்துள்ளனர். பின்னர் பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
விரைந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காவலர்களை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது பள்ளியில் வேலூர் RDO பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில், DEO சம்பத் ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய்து, மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ”நேரடியாக தேர்வுக்கு வர வேண்டும். ஹால் டிக்கெட் வாங்க வரும் போது பெற்றோரை உடன் அழைத்து வர வேண்டும் எனவும், மே4ஆம் தேதி வரை 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் பள்ளி மாணவர்கள் இது போன்ற ஒழுங்கினமான சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. மீறி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பெற்றோருக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்குபவர்களாக இருக்க வேண்டும்” என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 6ஆம் வகுப்பு மாணவி!