திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதா. இவரது கணவர் கணேசன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி கோயம்புத்தூர் குற்றப்பிரிவு காவல் துறையினர், கோயம்புத்தூர் பகுதியில் மூதாட்டியிடம் வைரம், தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் கணேசனை கைதுசெய்ய துத்திப்பட்டு பகுதிக்கு வந்தனர்.
அப்பொழுது குற்றப்பிரிவு காவலர்களைத் தாக்கிய கணேசனின் ஆதரவாளர்கள் காவல் துறையினரின் கைவிலங்கை வெல்டிங் மூலம் உடைத்து கணேசனை அங்கிருந்து தப்பிக்க வைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பளார் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை அமைத்து, தலைமறைவான கணேசனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 9ஆம் தேதி காலை கணேசன், அவருக்கு உதவியாக இருந்த 17 பேரை கைதுசெய்த தனிப்படை காவல் துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, கணேசன், அவருடன் 17 பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இக்குற்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான கணேசன் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் குண்டர் சட்ட வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார்.
அதன்பேரில் கணேசனை தற்போது குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைவா... ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினி