திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய மண்டலவாடி பகுதியில் வசிப்பவர்கள் யுவராஜ் - மாலதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் பெரியமண்டலவாடி பகுதியில் ஒரு வீட்டின் மேல் மாடியில் வசித்து வருகின்றனர். வீடுகளுக்கு வயரிங் வேலை செய்யும் யுவராஜ், வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். இதனைத்தொடந்து வீட்டின் மேல் மாடியில் சமையல் செய்து வந்துள்ளார் மாலதி.
அப்போது சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு இணைக்கப்பட்ட கேஸ் டியூப் பழுதடைந்து இருந்ததால், கேஸ் கசிந்து திடீரென்று மளமளவென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாலதி உடனடியாக சுதாரித்துக்கொண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த தீயணைப்புத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பீரோ, கட்டில் போன்ற வீட்டு உபயோக பொருள்கள் தீயில் கருகி சாம்பல் ஆயின.
இதையும் படிங்க: கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு