திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர் நிலைப்பள்ளி நுழைவுவாயிலில் வடமாநிலப்பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், பள்ளி நுழைவுவாயில் அருகே நீண்ட நேரமாக கன்டெய்னர் லாரி நின்று கொண்டு இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் நின்று கொண்டு இருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 2021-2022ஆம் கல்வி ஆண்டில் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள 104 உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கும் இலவச ஷுக்கள் (20,800 ஜோடி ஷுக்கள்) கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி தகவலை காவல் துறையினர் உறுதிசெய்தனர்.
இதையும் படிங்க: ஐபேக் குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்