திருப்பத்தூர்: ஆம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் சென்னை ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் பெங்களூர் ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "பேரறிஞர் அண்ணா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
எனது தாயிற்கு 50 வயதில் முறையான மருத்துவ பரிசோதனை செய்யாததால் 80 வயது வரை வாழ வேண்டியவர் 50 வயதிலேயே இறந்து விட்டார். அதே போல் எனது சகோதரரும் முறையான மருத்துவ பரிசோதனை செய்யாததால் இறந்து விட்டார்.
அதனால் அப்படி யாருக்கும் நிகழக் கூடாது என்னும் நோக்கில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் புதிய நீதிக் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏழை எளிய மக்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்று வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும், சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்த இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், கண் பரிசோதனை, செய்து பல்வேறு வியாதிகளுக்கும் மக்களுக்கு ஆலோசனை வழங்கிய மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகியிடம் வாக்குவாதம்! புதுக்கோட்டை கிரிக்கெட் சங்கத்தினர் திடீர் முற்றுகை! என்ன காரணம்?