திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் உள்ள பாலாறு மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் நரியம்பட்டு பாலாற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்த உமராபாத் காவல் துறையினர் அப்பகுதி வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்களை பிடித்தனர்.
அப்போது ஆறு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்கள், மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டு தப்பியோட முயன்றனர். இதனையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆறு மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த காவல்துறையினர், மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த நான்கு பேரை துரத்திப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள், நரியம்பட்டு பகுதியை சேர்ந்த மாயாசன் (எ) சிவலிங்கம் மற்றும் அன்பரசன், சின்னவரிகம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் வடிவேல் உள்ளிட்ட நான்கு பேர் எனத் தெரியவந்தது. மேலும், தப்பியோடிய இருவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள்- ஸ்டாலின் நாளை ஆலோசனை