கரோனா பெருந்தொற்றின் பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. முழு ஊரடங்கு சமயத்தில் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மளிகைக் கடைகள், வியாபார நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட எதுவும் திறக்கக்கூடாது என்று உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்த உத்தரவு மீறப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டத்தின் நகர் பகுதியை அடுத்துள்ள வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நியூ டவுன் கணவாய் புதூர் செல்லும் சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி முகக் கவசம் அணியாமலும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்து வந்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி நிர்வாகத்தினர், மீன்களை பறிமுதல் செய்து கடைகளை அப்புறப்படுத்தி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனுப்பினர்.
மேலும் முழு ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றாமல் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.