திருப்பத்தூர்: ஆம்பூர் நூருல்லாபேட்டை மசூதி தெரு பகுதியைச் சேர்ந்தவர், முனைவர் சயீத். இவரது இளைய மகள் அர்ஷியா நூரின் (25). இவர் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
அங்கு ஏற்பட்டுள்ள போர் மற்றும் அசாதாரண சூழ்நிலையில் சிக்கியுள்ள மாணவி அர்ஷியா நூரின், தான் மற்றும் தன்னுடன் இருக்கும் சக மாணவிகள் தங்கியுள்ள இடத்தில் உணவு மற்றும் மின்சாரம் உட்பட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை எனத் தன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினரின் நடவடிக்கையால் வேதனை
இதுகுறித்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டாலும், எந்த விதத் தகவலும் சரியாக தெரிவிக்கப்படவில்லை எனவும், இதனால் தங்களது மகள் மற்றும் அங்குள்ள மாணவிகளின் நிலை தங்களை மிகுந்த வேதனைக்குட்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்திற்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை, மின்னஞ்சல்களை கண்டுகொள்ளாமல், தவிர்த்துவிட்டதாகவும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தங்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது மேலும் தங்களுக்கு மன உளைச்சல் தருவதாகவும் வேதனையுடன் மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.